இந்தியாவின் முதல் தலைமை நீதிபதிகள் அருங்காட்சியகம் திறப்பு.. 280-க்கும் மேற்பட்ட சிலைகள் இடம்பெற்றுள்ளன!

இந்திய நீதித்துறையின் வரலாறு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய பங்களிப்புகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், நாட்டின் முதல் தலைமை நீதிபதிகள் அருங்காட்சியகம் ஹரியானா மாநிலம் சோனிபட்டில் அமைந்துள்ள ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 26-ம் தேதி திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், இந்திய நீதித்துறையின் வளர்ச்சி, அதன் வரலாற்றுப் பயணம் மற்றும் நீதித்துறைக்கு முக்கிய பங்காற்றிய முன்னாள் தலைமை நீதிபதிகளின் நினைவுகளைப் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
‘குடியரசின் பாதுகாவலர்கள்’ (Guardians of the Republic) என பெயரிடப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், இந்திய உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றை எடுத்துரைப்பதுடன், நாட்டின் அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை அமைப்பின் வளர்ச்சியில் முன்னாள் தலைமை நீதிபதிகள் ஆற்றிய பணிகளையும் பதிவு செய்கிறது. நீதித்துறையின் முக்கிய நிகழ்வுகள், வரலாற்று சிறப்புமிக்க தருணங்கள் மற்றும் நீதிபதிகளின் பங்களிப்புகளை பார்வையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் மொத்தம் 5 தனித்தனி அரங்குகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அரங்கும் நீதித்துறையின் வரலாறு மற்றும் அதன் முக்கிய அம்சங்களை விளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் 280-க்கும் மேற்பட்ட மார்பளவு சிலைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் நீதித்துறையில் பணியாற்றிய முக்கிய ஆளுமைகளை ஒரே இடத்தில் பார்வையிடும் வாய்ப்பு கிடைக்கிறது.
இதுதவிர, நாட்டின் 25 உயர்நீதிமன்றங்களின் மாதிரிகளும் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் மொழி மற்றும் கலாசார பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில், 22 மொழிகளைக் குறிக்கும் கைவினைத் திரைச்சீலைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நீதித்துறை வரலாற்றை மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு மொழிகள் மற்றும் கலாசார அடையாளங்களையும் ஒருங்கிணைத்து இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய நீதித்துறையின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படும் இந்த அருங்காட்சியகம், சட்டம், அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை குறித்து ஆர்வமுள்ள மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயனுள்ள இடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)